வியாழன், 1 நவம்பர், 2012

தேன் மிட்டாய்


தேன் மிட்டாய்க்கும் எனக்குமான பரிச்சயம் என் சிறுவயது முதலே... தேன் மிட்டாய் மிகவும் பிடித்துப்போனது அதன் சுவைக்காக அல்ல, சிறுவயதில் தாத்தா பாட்டி குடுக்கும் ஐந்து பைசாவிற்க்கு கிடைக்கும் ஒரே திண்பண்டம் என்பதால். சில நாட்களில் அதன் சுவை பிடித்துபோக, ஒரு ருபாய் கிடைத்தால் கூட தேன் மிட்டாய் மட்டுமே வாங்கி திண்பதாகிப்போனது…எதையும் செய்தே ஆகவேண்டும் என தோன் றுவது அடிமைதனம் என்றால் என் அளவிற்கு தேன் மிட்டாயும் அப்படித்தான்…  புகை,மது, அல்லது காதலுக்கு சிலர் அடிமை ஆவதைப் போல  நானும் இதற்கு சற்றே அடிமை பட்டுக் கிடக்கிறேன்!!!




இரண்டவது பிரசவம் பெங்களூரில் என்று முடிவானதும், வேலைப் பளு காரணமாக ஊர் பயணங்கள் சாத்தியப்படாமல் போனது. உடன் வேலை பார்க்கும் கோயமத்தூர்காரரிடம் எனக்கு தேன் மிட்டாய் ரொம்பவும் புடிக்கும் என்று ஏதோ ஒரு சமயத்தில் சொல்லி, நீங்க ஊருக்கு போகும் சமயம் முடிந்தால் வாங்கிவர சொன்னதாய் நியாபகம். சில வாரங்களில் ஒரு திங்கள் கிழமையன்று பைநிறைய தேன் மிட்டாயுடன் வந்து புன்னகைத்த அந்த நண்பனின் நேச முகம் இன்றும் மனக்கண்ணில்....

இன்று வித விதமான சாக்கலேட் மற்றும் குக்கீஸ் தின்னும் சமயங்களில் கூட தேன் மிட்டாய்க்காக மனம் ஏங்கும். ஊர் பயனங்களில் தேன் மிட்டய்க்கான தேடல் இன்றும் உண்டு. காரை விட்டு இறங்கி தேன் மிட்டாய் வாங்கும் சமயங்களில் அந்த கடைக்காரரின் புன்னகை முகம், நமக்குள்ளும் பூக்கும். ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் தேன் மிட்டாய் திண்கையில் பெட்டிக்கடை வாசலில் நம்மை விநோதமாகப்பார்க்கும் கண்கள், சிலசயங்களில் சங்கோஜமாக இருந்தாலும், தேன் மிட்டாய்ககான ஈர்ப்பே பிரதானமாகிப்போகிறது..ஏனோ தெரியவில்லை - தேன் மிட்டாய் மட்டும் என் நாவிற்கு மட்டுமல்லாமல் மனதிற்கும் சுவைகூட்டுகிறது....

பல சமயங்களில் கேலியும் கிண்டலும், தேன் மிட்டாய்க்கும் எனக்குமான நட்பின் பாலத்தை தகர்க்க எத்தனிக்கையில், அதன் மீதான ஈர்ப்பு இன்னும் பலமாகி போனது தான் நிதர்சனம். யார் தேன் மிட்டாய் வாங்கி கொடுத்தாலும் அவர்கள் மேல் ஒரு பற்றுதல் ஏற்படுவதை என்னவென்று சொல்ல?

இன்று துபாயில் வாழ்க்கை என்றாலும் “தமிழ் சந்தை” போகும்போதெல்லாம் தேன் மிட்டாய் தேடுவது வாடிக்கையாகிப் போனது!!

கருத்துகள் இல்லை: